×

கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்து அய்யனார் சிலை கண்டெடுப்பு

திருமங்கலம், ஏப். 19: கள்ளிக்குடி அருகேயுள்ள திருமால் கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்து அய்யனார் சிலை கண்மாய் கரையில் கண்டெக்கப்பட்டுள்ளது. கள்ளிக்குடி அருகேயுள்ள திருமால் கிராமத்தில் பழமையாக சிலைகள் இருப்பதாக மதுரை நாகரத்தினம் அங்காளம்மான் கலை கல்லூரி மாணவர் சிலம்பரசன் கொடுத்த தகவலைதொடர்ந்து கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையதொல்லியல் கள ஆய்வாளருமான தாமரைக்கண்ணன், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் தர் திருமால் கிராமத்திற்கு சென்று கள ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வின் போது திருமாலில் இருந்து அரசபட்டிக்கு செல்லும் வழியில் கண்மாய் கரையில் இந்த சிலைகள் கண்டறியப்பட்டன. இந்த சிலைகளை ஆய்வு செய்து பார்த்த போது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தவை என தெரியவந்தது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், பொதுவாக அய்யனார் சிலைகள் நீர்நிலைகள் ஓரமாக அதிகம் கிடைத்து வந்தன. இந்த சிலை மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் விரிந்த ஜடாபாரத்துடனம், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் வளையல்களுடன் வலது கரத்தில் பூச்செண்டினை பிடித்தப்படி அமைந்துள்ளது. இடது காலை மடக்கியும் வலது காலை கீழே தொங்கவிட்டும் உட்புதிஹாசன் கோலத்தில் அய்யனார் அமர்ந்துள்ளார்.

இதன் அருகே இரண்டு பெண்சிலைகள் உள்ளன. அவை பூர்ணகலை மற்றும் புஷ்பகலை சிலைகளாகும். அய்யனார் சிலையை மையமாக கொண்டே இரண்டு பெண்சிலைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சிலைகள் தத்தம் வலதுகைகளில் பூச்செண்டினை பிடித்தபடியும், இடதுகையில் ஹடிஹஸ்தமாக வைத்துள்ளனர். வலதுகாலை மடக்கியும் இடது காலை தொங்கவிட்டும் சுஹாசன கோலத்தில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்க்கும் போது முற்கால பாண்டியர்கள் கலைநயலத்தில் உருவானவைகளாகவே தெரிகிறது. இந்த சிலைகளுக்கு நேர் எதிரே முற்கால பாண்டியர்களின் கைவண்ணத்தில் உருவான யானை சிலையும் இடம் பெற்றுள்ளது என்றனர்.

The post கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்து அய்யனார் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Ayanar ,Thirumal village ,Kullikudi ,Thirumangalam ,Thirumal ,Kammai ,
× RELATED மிகவும் பழமை வாய்ந்த அய்யனார் சிலையை பாதுகாக்க வேண்டும்